Published : 17 Nov 2024 01:31 AM
Last Updated : 17 Nov 2024 01:31 AM
சென்னை: ‘விளையாட்டுத் துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக்க சர்வதேச விளையாட்டு நகரம் உதவும்’ என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னைக்கு அருகே உலகத் தரத்திலான ‘சர்வதேச விளையாட்டு நகரம்’ அமைப்பதற்கான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், சர்வதேச விளையாட்டு நகரத்தை உருவாக்குவது தொடர்பாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை, நீர்வளத்துறை, வீட்டு வசதித்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உட்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. தொடர்ந்து சர்வதேச விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது, உட்கட்டமைப்பு வசதிகள், வடிவமைப்பு போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தை விளையாட்டு போட்டிகளில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறை சார்ந்த கட்டமைப்பிலும், இந்தியாவின் முதல் மாநிலமாக்க வேண்டும் என்ற முதல்வரின் லட்சியத்துக்கு சர்வதேச விளையாட்டு நகரம் முக்கிய பங்காற்றும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக தென்கொரியா நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச வாள்வீச்சு போட்டியில் பங்கேற்கும் தமிழக வீராங்கனை சசிபிரபாவுக்கு ரூ.2 லட்சம், எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ளும் மாற்றுத் திறன் வீரர் ஜெகதீஷ் டில்லிக்கு ரூ.1.79 லட்சம், மலேசியாவில் நடைபெறவுள்ள செவி மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பசிபிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் 11 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.2.20 லட்சம் ஆகியவை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT