Published : 17 Nov 2024 01:23 AM
Last Updated : 17 Nov 2024 01:23 AM
சென்னை: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் கல்விக் கட்டண நிர்ணயக் குழு இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க கட்டண நிர்ணயக் குழுவை நியமித்து தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2022-23, 2023-24, 2024-25-ம் ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘‘தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.35 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 13.50 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.40 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 16.20 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பது பாரபட்சமானது.
செலவினங்கள் அதிகம்: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அதே உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் தான் தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளது. ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில் தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளுக்கு இணையாக சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தையும் உயர்த்தி நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் கட்டண நிர்ணயக்குழு தரப்பில் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT