Published : 17 Nov 2024 12:35 AM
Last Updated : 17 Nov 2024 12:35 AM

டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் போக்கை கைவிடாவிட்டால் போராட்டம்: ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை

தஞ்சாவூர்: டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் போக்கை ஆளுங்கட்சியினர் கைவிடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் கூறினார்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற, சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். அதை அதிமுகவும் நிறைவேற்றவில்லை; திமுகவும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளவில்லை.

தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசு என ஆட்சியாளர்கள் கூறினாலும், அது செயல்பாட்டில் இல்லை. தமிழக முதல்வர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என மக்களிடையே வாக்குறுதி அளித்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 500 டாஸ்மாக் கடைகளை மூடியதை வரவேற்கிறோம்.

ஆனால், அரசு கடைகளை மூடிவிட்டு, தனியாருக்கு மனமகிழ் மன்றம் என்ற வகையில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, அரசு செய்யும் வியாபாரத்தை, தனியாருக்கு மடைமாற்றும் போக்கு நடைபெறுகிறது. கணினி ரசீது முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதிலும் பல பிரச்சினைகளை ஊழியர்கள் சந்திப்பதால், மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றத்திலும், பணி நியமனத்திலும் முறைகேடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஆளுங்கட்சி தலையீடு இருக்கிறது.

டாஸ்மாக் ஊழியர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டி, மாமூல் வசூலிக்கும் போக்கு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, சம்மேளனத் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் துணைச் செயலாளர்கே.அன்பு, சம்மேளன மாவட்டச் செயலாளர் க.வீரையன், தலைவர் மதி, பொருளாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x