Published : 17 Nov 2024 12:07 AM
Last Updated : 17 Nov 2024 12:07 AM

ஊத்தங்கரை சென்னானூர் அகழாய்வு தமிழ் நாகரிகத்தின் மணிமகுடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

சென்னானூர் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ‘டோலராய்டு’ என்னும் மூலக்கற்களில் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள்.

கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டின் புதிய கற்காலப் பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்கிறது. இது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம் என்று நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் குன்னத்தூர் ஊராட்சி சென்னானூர் கிராமத்தில், புதிய கற்கால பண்பாட்டுக் கூறுகளைக் கண்டறியும் வகையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் தொல்லியல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், மேற்குப் பகுதி மலையடிவாரத்தில் 10-வது அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு, 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் கூறியதாவது: சென்னானூர் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், கண்ணாடி வளையல் துண்டுகள், சங்கு வளையல் துண்டுகள், தக்ளிகள், வட்ட சில்லுகள், பானை வனை சில்லுகள், ஏர்கலப்பையின் இரும்பிலான கொழுமுனை, இரும்பிலான அம்பு முனைகள், ஈட்டிமுனை, குவார்ட்ஸ் கல்மணி, சுடுமண்ணாலான முத்திரைகள், மணிகள், விளக்குகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு உள்ளன.

இவை தவிர, புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய வழவழப்பான மெருகேற்றப்பட்ட கற்கோடாரி, எலும்பிலான கிழிப்பான் மற்றும் பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வு குழிகளில் தரையிலிருந்து 120 செ.மீ. முதல் 196 செ.மீ. ஆழம் வரை புதிய கற்கால பண்பாடு நிலவியதற்கான சான்றுகளாக 5 மெருகேற்றப்பட்ட கற்கோடாரிகள் கிடைத்துள்ளன. மேலும், களமேற்பரப்பாய்வில் 8 கருவிகள் கிடைத்துள்ளன.

இக்கருவிகள் அனைத்தும், ‘டோலராய்டு’ என்ற மூலக் கற்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும், குழிகள்தோண்டுவதற்கும், விளை நிலத்தை உழுவதற்கு ஏர்கலப்பையாகவும் பயன்பட்டு இருக்கலாம்.

சென்னானூர் அகழாய்வில் காலவரிசைப்படி நுண் கற்காலம், புதிய கற்காலம், புதிய கற்காலத்தில் இருந்து இரும்பு காலத்துக்கான மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்றுத் தொடக்கக் காலத்தின் நிலை ஆகியவை இக்குழியில் காணப்படும் மண் அடுக்கின் மூலம் அறிய முடிகிறது. இத்தொல்லியல் தளத்தின் உறுதியான காலத்தை அறிவியல் முறைப்படி அறிய மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளன.

தென்பெண்ணையாற்றின் கிளை ஆறான பாம்பாறு, இத்தொல்லியல் மேட்டையொட்டி பயணித்துள்ளது. புதிய கற்காலத்தில் வேளாண்மை மேற்கொள்ளவும், ஆடு, மாடுகளை வளர்க்கவும் ஏற்ற இடமாக சென்னானூர் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், "தமிழ்நாட்டின் புதிய கற்கால பண்பாட்டுச் சுவடுகளை ஏந்தி, சிறப்புமிக்க தொல்லியல் தளமாக சென்னானூர் திகழ்வது தமிழ் நாகரிகத்தின் மற்றொரு மணிமகுடம்" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x