Published : 16 Nov 2024 09:07 AM
Last Updated : 16 Nov 2024 09:07 AM
இப்பொதெல்லாம் கட்சி தொடங்கும் முன்பே பதவிகளுக்கு ஆட்கள் வந்துவிடுகிறார்கள். ஆனால், புதுச்சேரியில் கட்சி தொடங்கி வருஷம் 13 ஆகியும் இன்னமும் கட்சிப் பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தான் இந்த சரித்திர சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் தேர்தலுக்குத் தேர்தல் கட்சி தாவுவோர் எண்ணிக்கை கின்னஸ் லெவல். முன்பெல்லாம் இங்கு தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் தான் இருக்கும். ஆனால், அதை உடைத்து மாநிலக் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முடியும் என்று வெற்றிக்கொடி நட்டவர் ரங்கசாமி. காங்கிரஸ் முதல்வராக இருந்து நீக்கப்பட்ட ரங்கசாமி, அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை 2011-ல் தொடங்கினார். அடுத்த இரண்டு மாதத்திலேயே தேர்தலைச் சந்தித்து ஆட்சியை பிடித்து பலரது புருவத்தை உயரவைத்தார்.
கட்சி தொடங்கியபோது கட்சியின் தலைவரான ரங்கசாமிக்குக் கீழே பொதுச்செயலாளர் (மறைந்த) பாலன் உட்பட 8 பேர் கொண்ட நிர்வாக குழு மட்டும் அமைக்கப்பட்டது. இதைத் தவிர வேறெந்த நிர்வாகிகளும் நியமிக்கப்படவில்லை. காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட அனுதாபத்தை வைத்து ஆட்சியைப் பிடித்த ரங்கசாமியால் அடுத்த தேர்தலில் 8 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. அதனால் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தே மிஞ்சியது.
தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டெழ மாநிலம் முழுக்க நிர்வாகிகளை நியமித்து கட்சியைப் பலப்படுத்த முடிவெடுத்தார் ரங்கசாமி. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் பாலன், தொகுதி, மாவட்டம், மாநிலம், அணிகள் வாரியாக நிர்வாகிகள் பட்டியலை தயாரித்தார். ஆனால் அந்தப் பட்டியல் அதிகாரபூர்வமாக இறுதிவரை வெளியாகவில்லை. ஆனால், பட்டியலில் தாங்களும் இருப்பதாக தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொண்டு இன்றளவிலும் பலபேர் கட்சிக்குள் அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
கட்சியின் அடித்தளத்தை இந்த லெவலில் வைத்துக் கொண்டு 2021ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் சீட் போட்டு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி ஆட்சியில் அமர்ந்தார். ஆனால், மக்களவைத் தேர்தலில் இதே கூட்டணி 22 எம்எல்ஏ-க்களை தங்கள் வசம் வைத்திருந்தும் காங்கிரசிடம் தோற்றுப் போனது.
இந்தத் தோல்விக்கு காரணம் கட்சியின் அடிமட்டம் வரை நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருப்பதே என கட்சிக்குள் கலகம் வெடித்தது. இன்னும் 15 மாதங்களில் சட்டப் பேரவைக்கு தேர்தல் வரவிருப்பதால் அதற்கு முன்னதாக கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மீண்டும் இப்போது ரங்கசாமி கட்சிக்கு ஞானோதயம் பிறந்திருக்கிறது.
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் நிர்வாகிகளை நியமித்து கட்சியை பலப்படுத்த ரங்கசாமி முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்தாலோசித்துள்ளோம். சீக்கிரமே புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம்” என்றனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களோ, “எங்களுக்கும் பொறுப்புகள் கிடைக்கும் என்று நம்பித்தான் இந்தக் கட்சிக்கு வந்தோம். ஆனால், 13 ஆண்டுகளாகியும் நாங்கள் இன்னும் தொண்டனாகவே தொடர்கிறோம். யார் என்ன சொன்னாலும் இறுதி முடிவு ரங்கசாமிதான் எடுப்பார். முதலில் அவர் 30 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை சொல்லட்டும் பார்க்கலாம்” என்று சவால் தொனியில் சொல்கிறார்கள்.
என்னாங்கடா இது ஆளும்கட்சிக்கு வந்த சோதனை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT