Published : 16 Nov 2024 06:35 AM
Last Updated : 16 Nov 2024 06:35 AM

சென்னையின் சாலை கட்டமைப்பு குறித்து அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்து போக்குவரத்து சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் வாலாஜா சாலை சந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரை, புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச். சாலையில் இருந்து பெரியார் சாலை வரை, சர்தார் பட்டேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் அண்ணா சாலை சந்திப்பு வரை, காந்தி மண்டபம் சாலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சென்னை சிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரை, கிரீன்வேஸ் சாலையில் பட்டினப்பாக்கம் முதல் திரு.வி.க. பாலம் வரை உள்ள பேருந்து போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியகூறுகளை ஆராய்வது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்தபணிகள் குறித்து அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறை செயலர்கள் காகர்லா உஷா, த.கார்த்திகேயன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x