Last Updated : 15 Nov, 2024 07:18 PM

1  

Published : 15 Nov 2024 07:18 PM
Last Updated : 15 Nov 2024 07:18 PM

கிண்டி கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (33). கடந்த 13-ம் தேதி இரவு வயிற்று வலி காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். விக்னேஷ் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும் தான் காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் குற்றச்சாட்டினர். பின்னர், அவரது உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விக்னேஷின் சகோதரர் பார்த்திபன் கூறியது: “இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அங்கு சிகிச்சை பார்க்க இயலாத காரணத்தினால், அரசு மருத்துவமனைக்கு வந்தோம். தனியார் மருத்துவமனை சென்றபின், அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து, இந்த மருத்துவமனையில் அனுமதித்தோம். இங்கே வந்ததில் இருந்து மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. வியாழக்கிழமை நள்ளிவில் திடீரென அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லாததால் முறையான சிகிச்சை கிடைக்கவில்லை. மருத்துவர்கள் யாராவது பணியில் இருந்திருந்தால், விக்னேஷை காப்பாற்றி இருக்கலாம்” என்றார்.

விக்னேஷின் மனைவி பரிமளம் கூறுகையில்,“மருத்துவமனைக்கு வரும்போது, விக்னேஷ் நன்றாக நடந்து வந்தார். நேற்று இரவு கூட என்னிடம் செல்போனில் போனில் நன்றாக தான் பேசினார். திடீரென அவர் இறந்து விட்டதாக காலையில் சொல்கின்றனர். இந்த மருத்துமவனையில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தப்போது, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமவனைக்கு அழைத்து செல்கிறோம் என்றோம். ஆனால், எங்களை அனுப்பவில்லை” என்றார்.

இதுகுறித்து, மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “விக்னேஷ் மருத்துவமனையில் உள்நோயாளியாக 13-ம் தேதி இரவு 11:25 மணியளவில் கடுமையான வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்பு, தனியார் மருத்துவமனையில், கணையம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று அங்கு பணம் செலுத்த முடியாமல், இங்கு வந்தார். அவருக்கு கடுமையான குடிபழக்கத்தினால் கணையம் முழுவதும் பாதிக்கப்பட்டு, இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தைராய்டு சுரப்பி நோயும் இருந்தது. அவரது உடல்நிலை குறித்து, விக்னேஷின் தந்தை, மனைவி, சகோதரன், சகோதரி ஆகியோரிடம் தெளிவாக மருத்துவர்கள் விளக்கி ஒப்புதல் பெற்றுள்ளனர். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், வாய் வழியாக செயற்கை குழாய் பொருத்துவதற்கு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இன்று காலை 9:18 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், இன்று பிற்பகலில் விக்னேஷின் உடலை, அவரது உறவினர்கள் பெற்று கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x