Published : 15 Nov 2024 05:23 PM
Last Updated : 15 Nov 2024 05:23 PM

“அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான்” - சரத்குமார் 

சரத்குமார் | கோப்புப்படம்

சென்னை: “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகர்தான். அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவைதான்,” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜகவைச் சேர்ந்த சரத்குமார் இன்று (நவ.15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “1996-ம் ஆண்டு தமிழகத்தில், இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக அரசியலுக்கு வந்தேன். அன்றைக்கு யாருக்கு அந்த தைரியமும், திராணியும் கிடையாது. அந்த சமயத்தில், தவெக தலைவர் விஜய் கூறுவது போல உச்ச நடிகர்தான் நானும். மிகப் பெரிய ரசிகர்கள் இருந்தனர். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு ஒரு படத்தைப் பார்த்தது என்றால், அது என்னுடைய படத்தைத்தான். அந்த சமயத்தில்தான் நான் அரசியலுக்கே வந்தேன்.

அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்தபோதுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவை. ஜெயலலிதாவை யாரும் எதிர்க்கவே முடியாது என்று அப்போது கூறினார்கள். என் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். மலத்தைக் கழித்து ஊற்றினார்கள். ஆனாலும், நான் 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன்.

அதேபோல், நான் தனியாக அரசியல் கட்சி துவங்கியபோது, இரு மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம். எனவே, என்னைப் பொருத்தவரையில், எதுவும் சாத்தியம், உழைப்பும் உறுதியும் இருந்தால். உலகளவில் இந்தியாவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் மோடி. உலகளவில் இந்தியர்களின் பெருமை உயர்ந்துவிட்டது. முந்தைய ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழக மீனவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாதிப்புகள் குறைந்துகொண்டே வருகிறது. இலங்கை அரசுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்ததால், தான் பொருளாதார ரீதியா அந்த நாடு வலுவான நிலையில் இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x