Published : 15 Nov 2024 11:58 AM
Last Updated : 15 Nov 2024 11:58 AM

டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல்: திட்டத்தை கைவிட ராமதாஸ் வலியுறுத்தல்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிஜிட்டல் பயிர் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த வேளாண் மாணவர்களும், அதிகாரிகளும் கணக்கெடுப்புக்காக அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகில் உள்ள நிலத்திற்கு சென்ற போது, அங்கிருந்த குண்டர்களால் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மணி நேரம் சிறைவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் அதிகாரிகளின் தலையீட்டால் மீட்கப்பட்டுள்ளனர். வேளாண் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவதை தொடக்க நிலையிலேயே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. ’’செப்பனிடப்படாத பகுதிகளில் பணியாற்றும் மாணவ, மாணவிகளை பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் கடித்து அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். பாதுகாப்பற்ற தனித்த பகுதிகளில் பணியாற்றும் போது மாணவ, மாணவியருக்கு சமூகவிரோதிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதற்கெல்லாம் அரசு பொறுப்பேற்குமா?” என்று பாட்டாளி மக்கள் கட்சி வினா எழுப்பியிருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஐயத்தை உறுதி செய்யும் வகையில் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் டிஜிட்டல் சர்வே பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு சில நாட்கள் முன்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளுக்கு சென்ற ஒரு மாணவி பாம்பு கடித்ததாலும், இன்னொரு மாணவி விசப்பூச்சி கடித்ததாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாக மாணவர்கள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதி வரை டிஜிட்டல் பயிர் சர்வே மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் இன்னும் என்னென்ன பாதிப்புகள் நிகழும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகள் மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாகவோ தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆபத்தான சூழலில் வேளாண் மாணவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x