Last Updated : 15 Nov, 2024 09:23 AM

1  

Published : 15 Nov 2024 09:23 AM
Last Updated : 15 Nov 2024 09:23 AM

ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி... இறங்கி வருகிறாரா இபிஎஸ்?

“ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. “பாஜகவுடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று அறிவித்து அந்தக் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறினார் பழனிசாமி. அது முதலே அதிமுகவினர் பாஜகவை பரம வைரியாகவே பார்த்து வருகிறார்கள். அதேபோல் பாஜக தரப்பிலும் சிலர் அதிமுகவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வசைபாடி வருகிறார்கள். இந்த நிலையில் தான் அதிரடி திருப்பமாக பழனிசாமியின் கூட்டணி குறித்த பேச்சு அமைந்திருக்கிறது.

கடந்த 10-ம் தேதி திருச்​சியில் செய்தி​யாளர்களை சந்தித்த பழனிசாமி​யிடம், பாமக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்​பீர்களா என்று கேட்டதற்கு, “ஒருமித்த கருத்​துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்​கப்​படும்” என்று பதில் சொன்னார். இதனால், மீண்டும் பாஜக பக்கம் சாய்கிறாரா பழனிசாமி என்கிற கேள்வி தமிழக அரசியலில் பெரிதாக எழுந்​துள்ளது.

2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்தவர், இப்போது மாற்றி யோசிக்கக் காரணம், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி​பெற்றே ஆக வேண்டிய கட்டா​யத்தில் இருப்பதே என்கிறார்கள். பத்து தோல்வி பழனிசாமி என்று எதிரி​களால் பரிகாசம் செய்யப்​படுவதை போக்கி அதிமுகவை வெற்றிக் கோட்டைக்கு அழைத்துச் சென்றே ஆகவேண்டும் என்பதை நன்கு உணர்ந்​திருக்கும் பழனிசாமி, அதற்காக சில சமரசங்​களுக்கு தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்​க​மானவர்கள் கூறுகிறார்கள்.

மக்களவைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் தயவின்றியே 12 சதவீத அளவுக்கு வாக்குகளை பெற்று தனது இருப்பைக் காட்டியது பாஜக. இதையும் மனதில் வைத்தே பாஜகவுக்கு மீண்டும் கதவைத் திறக்கும் முடிவுக்கு பழனிசாமி வந்திருப்பதாக தெரிகிறது. அதனால் தான் மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டத்​தில், “நமக்கு எதிரி திமுக தான்” என அழுத்தமாக சொல்லி இருக்​கிறார்.

இதை உறுதி செய்யும் விதமாகவே திருச்​சியில் அவரது பேட்டியும் இருந்தது. திமுகவை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் அதிமுகவை அரியணை ஏற்று​வதற்காக பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் கூட்ட​ணிக்குள் கொண்டு​வரும் மனநிலையில் பழனிசாமி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டத்​தினர் தெரிவிக்​கின்​றனர்.

இதனிடையே, நடிகர் விஜய்​யுடன் அதிமுக கூட்டணி அமைக்​கலாம் என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால், “கூட்​ட​ணிக்கு தலைமை அதிமுக தான்” என பழனிசாமி தெளிவாகச் சொல்லி​விட்​ட​தால், அதிமுகவும் தவெகவும் ஒரே வண்டியில் பயணிக்க வாய்ப்​பில்லை. அதிமுக தலைமையை ஏற்று எந்தக் கட்சி வந்தாலும் கூட்ட​ணிக்கு தயார் என்று சொல்லி​விட்ட பழனிசாமி, விஜயகாந்த்தைப் போல விஜய்யும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்ட​ணிக்கு வந்தால் ஓகே.

இல்லை​யென்​றால், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை மீண்டும் அரவணைத்து தேர்தலைச் சந்திப்பது என்ற முடிவில் இருப்​ப​தாகச் சொல்கிறார்கள். “ஒருமித்த கருத்​துடைய​வர்கள் எல்லாம் ஓரணியில் சேரவேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்​தும்” என பாஜகவின் தமிழிசை சவுந்​தரராஜனும் சொல்லி இருப்பது இங்கு கூடுதல் கவனம் பெறுகிறது.

இருந்த போதும் பேரத்தை அதிகரிக்க, “பாஜக​வுடன் ஒருபோதும் கூட்டணி இல்லவே இல்லை” என்று பழனிசாமியும் ஜெயக்​குமாரும் படித்துக் கொண்டிருக்​கிறார்கள். இந்த விஷயத்தில் பாஜக எடுக்கும் அடுத்​தகட்ட நகர்வைப் பொறுத்து, “அரசி​யலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பரும் இல்லை. ஏன்... பண்டாரம் பரதேசிகள் என்று பாஜகவை விமர்​சித்த கருணாநிதியே பாஜகவுடன் கூட்டணி வைக்க​வில்​லையா?” என்று திண்டுக்​கல்லார் போன்ற​வர்கள் தத்துவ முத்துகளை உதிர்க்​கலாம். அதுவரை பொறுத்​திருந்து பார்க்​கலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x