Published : 15 Nov 2024 06:24 AM
Last Updated : 15 Nov 2024 06:24 AM

சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்குகள் எத்தனை? - விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகர போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த அக்.4-ம் தேதி, சென்னை மாநிலக் கல்லூரி மாணவரான திருத்தணியைச் சேர்ந்த சுந்தர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அக்.9 அன்று சுந்தர் மரணம் அடைந்தார்.

இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில், ஈஸ்வரன், யுவராஜ், ஈஸ்வர், சந்துரு ஆகிய மாணவர்கள், தங்களுக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் கோரிய மாணவர்களி்ன் பெற்றோர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘‘கைதாகியுள்ள மாணவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்பச்சூழல் கருதி அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என கோரினர்.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அருள்செல்வன், ‘‘இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 10 நாட்களுக்கும் குறைவாகவே கல்லூரிக்கு சென்றுள்ளனர்’’ என்று குற்றம்சாட்டினார்.

அதையடுத்து நீதிபதி, ‘‘கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள உங்களது மகன்களை ஜாமீன் எடுக்க துடிக்கும் பெற்றோராகிய நீங்கள், உயிரிழந்த மாணவனின் குடும்பம் என்ன நிலைமையில் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்பதற்காகவே உங்களை நேரில் ஆஜராகச் சொன்னேன்.

இந்த மாணவர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்க்கும்போது அவர்கள் பொறுப்பான மாணவர்களாகத் தெரியவில்லை. இறந்த மாணவரும் சாதாரண கூலி வேலை செய்பவரின் மகன்தான். அதேபோல இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோரும் ஏழ்மை நிலையில்தான் உள்ளனர்.

கல்லூரிக்கு செல்லும்போது ரயில் தினம், பேருந்து தினம் கொண்டாடும் போதுதான் மாணவர்களுக்கு இடையே மோதல் உருவாகிறது. நல்லவேளை விமானத்தில் எந்த மாணவர்களும் கல்லூரிக்குப் போவதில்லை. மாணவர்களுக்கு நடைபெறும் அடிதடி, மோதல் சம்பவங்களுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே கடந்த 10 ஆண்டுகளில் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த அடிதடி, மோதல் சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றின் தற்போதைய நிலை, சமரசமானவை எத்தனை என்பது குறித்த விவரங்களை சென்னை மாநகர போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x