Published : 15 Nov 2024 04:08 AM
Last Updated : 15 Nov 2024 04:08 AM
சென்னை: அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ‘‘எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே’’ என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் பிரேமாவுக்கு, மருத்துவர் பாலாஜி முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் விக்னேஷ், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூரில் வசிக்கும் பிரேமாவின் சகோதரி தேவி உள்ளிட்ட உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘‘டாக்டரை விக்னேஷ் கத்தியால் குத்தியது பற்றி முன்னரே எங்களுக்கு எதுவும் தெரியாது. அது பற்றி அவன் எங்களிடம் எதுவும் பேசவில்லை. அவன் இப்படி செய்யப் போகிறான் என்று தெரிந்திருந்தால் நாங்கள் அவனைத் தடுத்திருப்போம். அவன் செய்த செயல் ஏற்புடையது அல்ல.
அதே நேரத்தில் அந்த டாக்டரின் சிகிச்சை முறையால் எங்கள் வீட்டிலும் ஒரு உயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேச இங்கு யாருமே இல்லையே. பிரேமாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வீட்டில் இருந்த மருத்துவ ஆவணங்களையெல்லாம் காவல்துறையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். மருத்துவ அறிக்கைகள் இல்லாமல் அவருக்கு எப்படி மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியும்’’ என்று கூறினர்.
விக்னேஷின் தாயாக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா, இல்லையா என்பது பற்றி மருத்துவ நிபுணர்களால் மட்டுமே கூற முடியும். ஆனால், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காக ஒரு டாக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில், விக்னேஷ் செய்த குற்றத்துக்காக நோயாளியான அவரது தாயாருக்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பது சமூக ஆர்வலர்
களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே விக்னேஷ் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற மருத்துவ ஆவணங்களை திரும்ப ஒப்படைத்து விட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல் துறை தரப்பில் விசாரித்தபோது, ‘‘வழக்கு விசாரணை தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சை தொடர்பாகவே கத்திகுத்து நிகழ்ந்துள்ளது. எனவே, பிரேமா தொடர்புடைய மருத்துவ அறிக்கை விசாரணைக்கு முக்கியமாக தேவைப்பட்டது. அதற்காகவே அவற்றை எடுத்துச் சென்றோம். அதன் பின்னர், நேற்று முன்தினமே அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட்டோம்’’ என்றனர்.
டாக்டர்கள் மீது புகார்: மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷை சக மருத்துவர்கள், பணியாளர்கள் சுற்றிவளைத்து தாக்கினர். சிலர் காலால் எட்டியும் உதைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், விக்னேஷின் தாய் பிரேமா கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘என் மகன் விக்னேஷ் இதய நோயாளி. அவரை மருத்துவர்கள் உட்பட பலர் சுற்றி வளைத்து தாக்கினர். எனவே, மகன் பலத்த காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிறையில் உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT