Published : 14 Nov 2024 08:45 PM
Last Updated : 14 Nov 2024 08:45 PM
சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி நேற்று (நவ.13) காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உட்பட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை, தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நலம் மற்றும் பொது நல மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை (கேஎம்சி), அயனாவரம் அரசு மனநல காப்பகம் (ஐஎம்எச்) ஆகிய 8 அரசு மருத்துவமனைகளில் முழு அளவில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்துவமனை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை என இந்த 3 மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் 1 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, காந்திநகர் அரசு மருத்துவமனை, அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை, கே.கே. நகர் அரசு மருத்துவமனை, கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அமைந்தகரை அரசு மகப்பேறு மருத்துவமனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனை என இந்த 8 மருத்துவமனைகளில் இன்று (14-ம் தேதி) முதல் புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் 2 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ சேவை பாதிப்பு: இதனிடையே, மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. வாசிக்க > சென்னை சம்பவத்துக்கு கண்டனம் | தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்: நோயாளிகள் பாதிப்பு
அதேவேளையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது > கையில் ‘டேக்’ முதல் ‘மெட்டல் டிடெக்டர்’ வரை - மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிய அமைச்சர்
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: இதனிடையே, டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்கனவே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் உள்ள போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரவு பணியில் இருக்கும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரோந்து மற்றும் கண்காணிப்பில் கூடுதல் போலீஸார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT