Published : 14 Nov 2024 06:58 PM
Last Updated : 14 Nov 2024 06:58 PM

தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியை தடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

மதுரை: ‘தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற முயற்சி நடக்கிறது. இதனை தமிழக அரசு தலையிட்டு பாதுகாக்க வேண்டும்’ என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக மக்களின் பெரும் வரலாற்று ஆவணங்களாகிய கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து மைப்படி எடுக்கப்பட்டன. அந்த மைப்படிகள் 1961-ம் ஆண்டு வாக்கில் மைசூருக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பின்றியும், தமிழக மாணவர்கள் ஆய்வுக்குகூட அணுகமுடியாத நிலையிலும் இருந்தன. எனவே, அவற்றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று தமிழார்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம்.

கடந்த 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதியரசராக இருந்த கிருபாகரன் அமர்வு மைசூரில் சிதைந்து கொண்டிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து பாதுகாக்குமாறு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து 2022 நவம்பர் மாதத்தில் மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளில் பாதியளவுக்கும் குறைவான படிகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன.

தற்போது, 'பராமரிக்க முடியாத தட்பவெப்ப சூழ்நிலை, கட்டிடம் இன்மை' என்று காரணம் கூறி அவற்றை மீண்டும் மைசூருக்கே மாற்றுவதற்கான முயற்சி திரைமறைவில் தொடங்கிவிட்டது. இதை தடுக்கத் தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போகும். எனவே இதனை பாதுகாக்கும் பொறுப்பை கேட்டுப்பெற தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். தற்போதுவரை மின்னுருவாக்கம் செய்யப்படாமல் இருக்கும் இப்பிரதிகளை மின்னுருவாக்கம் செய்யும் பொறுப்பையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.

சரஸ்வதி நாகரிக ஆய்வுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கத் தயங்காத மத்திய அரசு, தமிழ்க் கல்வெட்டுகளைப் பாதுகாக்க நல்ல கட்டிடங்களை உருவாக்கவும். மின்னுருவாக்கம் செய்யவும் நிதி ஒதுக்க தயாராக இல்லை. நமது சான்றாவணங்களை நமது வரலாற்றுக்கும், தத்துவத்துக்கும் எதிரானவர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்புவது அறியாமை. எனவே, கல்வெட்டுகள் என்னும் நமது காலப்பெட்டகத்தை நாமே பாதுகாப்போம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x