Published : 14 Nov 2024 04:29 PM
Last Updated : 14 Nov 2024 04:29 PM
சென்னை: சிறப்பு இயக்கத்தில் தனியார் பேருந்துகளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பு விவரங்களை சுட்டிக்காட்டி, போக்குவரத்து அமைச்சருக்கு சிஐடியு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பண்டிகை கால சிறப்பு இயக்கத்துக்கு அரசு பேருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைக்கு தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்பட்டன.
சிறப்பு இயக்கத்தில் தனியார் பேருந்துகளுக்கு 1 கிமீ-க்கு ரூ.51.25 கொடுக்கும் நிலையில், அரசு பேருந்துகளை பயன்படுத்தினால் ரூ.90 செலவாகும் எனவும், வழித்தடத்தை மாற்றியமைக்கும்போது அங்குள்ள பயணிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இந்த காரணங்கள் சரியற்றவை. பல போக்குவரத்துக் கழகங்களில் ரூ.65 மட்டுமே இயக்கத்துக்கான செலவாக இருக்கிறது.
அதே நேரம், சிறப்பு இயக்கத்தில் ஒரு கி.மீ-க்கு ரூ.30-க்கு மேல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு வருவாய் கிடைப்பதை தவிர்த்து, தனியார் பேருந்துகளை இயக்கியதால் கழகங்களுக்கு சுமார் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் நியாயமற்றது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு வரை ஒரு நாளில் 2.10 கோடி பேர் பயணித்து வந்த நிலையில், தற்போது 1.75 கோடியாக பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் அடிப்படையில், போக்குவரத்துக் கழகங்களால் நிச்சயமாக 2 கோடிக்கு மேலான பயணிகளை பாதிப்பின்றி கையாள முடியும் என்பது தெளிவாகிறது.
இவ்வாறாக பயணிகள் குறைவதற்கும், போக்குவரத்துக் கழகங்கள் சீர்குலைவதற்கும் அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட 8 அரசாணைகளை காரணம். இவற்றை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். எனவே, இந்த கருத்துக்கள் அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT