Published : 14 Nov 2024 01:32 PM
Last Updated : 14 Nov 2024 01:32 PM
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயியல் பிரிவு மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இச்சம்பவத்தைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்று பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று (நவ.14) போலீஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஏற்கெனவே இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட வந்தனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி கிண்டி மருத்துவமனையில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் நேற்றைய தினமே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிண்டி மருத்துவமனை வளாகத்தில் புறகாவல் நிலையம் அமைக்கப்படும் என்று காவல்துறை உறுதி அளித்திருந்தது. இன்று மருத்துவமனை முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஷிப்டுக்கு 30 பேர் வீதம் 90 காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் புறநோயாளிகள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டம்: கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, இன்று (நவ.14) அம் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அந்த மருத்துவமனையின் சில பிரிவுகளில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT