Published : 14 Nov 2024 09:43 AM
Last Updated : 14 Nov 2024 09:43 AM
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சோதனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
கடந்த மாதம்தான் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஆலந்தூர் நீதிமன்றம் முடித்து வைத்தது தவறானது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (நவ.14) காலை தொடங்கி சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகம், அவரது மகன் சார்லஸின் இல்லம், அவருக்குச் சொந்தமான நிறுவனம், மருமகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள வீடு, கோவை துடியலூரில் உள்ள லாட்டரி மார்ட்டினின் வீடு, அருகிலேயே உள்ள அவரது அலுவலகம், அவருக்குச் சொந்தமான ‘மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை’ எனப் பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கும், உத்தரவும்.. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பணம் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை முடித்து வைக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூர் நீதிமனறத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், “மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப் பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்கும்படி அறிக்கை தாக்கல் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். எனவே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் அவருடைய உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, கோவையில் பல்வேறு இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது. சோதனையின் முடிவில்தான் முக்கிய ஆவணங்கள் ஏதும் சிக்கியதா என்பது தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT