Published : 14 Nov 2024 09:01 AM
Last Updated : 14 Nov 2024 09:01 AM
“கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.” என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘உலக நாயகன்’ உள்ளிட்ட அடைமொழிகளைத் துறப்பதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை பாஜக முக்கியத் தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்திருந்தார். “ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் கமல்ஹாசன் தன் பட்டத்தை துறந்துள்ளார்” என தமிழிசை கூறியிருந்தார்.
இந்நிலையில், “கமல்ஹாசன் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை தமிழிசை சவுந்தரராஜன் புரிந்து கொள்ள வேண்டும்.” என மநீம அறிக்கை வெளியிட்டுள்ளது.
மநீம மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதாவில் கேட்பாரற்று இருக்கும் தமிழிசை சவுந்தராஜன், இன்று கமல்ஹாசன் தனக்களிக்கப்பட்ட ‘உலகநாயகன்’ என்ற பட்டத்தை தவிர்க்கும்படி வெளியிட்ட அறிக்கையை, அரைவேக்காட்டுத்தனமாக விமர்சித்துள்ளார். ஆளும் திமுகவின் மிரட்டலால்தான் தன் பட்டத்தை துறந்துள்ளதாக கணிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் நின்று எம்பி ஆகி மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், இருந்த ஆளுந்ர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை சவுந்தராஜன். இவர் தன் வாழ்க்கையையே சரியாக கணிக்க முடியாதவர். நம் தலைவரின் செயல்பாட்டை கணிக்க முயன்றுள்ளார்.
நம் தலைவர் மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘உலகநாயகன்’ பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு. அது சாதித்த மனிதனின் பக்குவத்தின் வெளிப்பாடு. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் தங்களுக்கில்லை என்பது வருத்தத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், “இதுவரை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திமுக பெயர் மாற்றி வந்தது. இப்போது கமல்ஹாசனை மிரட்டி உலகநாயகன் பட்டத்தையும் மாற்றச் செய்துவிட்டது. உதயநிதிக்கு போட்டியாகிவிடக்கூடாது என உலகநாயகன் பட்டத்தை மாற்றவைத்துவிட்டனர். கமல் இப்போது திமுககாரராகவே மாறிவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்தே மநீம பொதுச் செயலாளர் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT