Published : 14 Nov 2024 06:11 AM
Last Updated : 14 Nov 2024 06:11 AM
சென்னை: சிஎம்டிஏ மூலமாக 600 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி அதிமுக சார்பில் செங்கல்பட்டு அடுத்த பதுவஞ்சேரியில் வரும் நவ.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் சுமார் 520 ஏக்கர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் சுமார் 22 ஏக்கர், மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கோயிலாஞ்சேரி கிராமத்தில் சுமார் 58 ஏக்கர் என மொத்தம் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை சிஎம்டிஏ மூலமாக திமுக அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 14-ம் தேதியிட்ட செங்கல்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், காலம் காலமாக விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளின் நிலங்களை அபகரித்து 40 சதவீத நிலத்தில் சாலைகள், பூங்காக்கள், பள்ளிகள் போன்றவற்றை மேம்படுத்தி, 60 சதவீத நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த அடிப்படையில் திருப்பித் தருவீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் விசாரித்தபோது, அவர்கள் சரியான பதில்தர மறுக்கிறார்கள். மேலும், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக அவர்களுடைய விவசாய நிலங்கள் திகழ்கின்றன.
விவசாயத்தையும், விவசாயிகளையும் ஊக்கப்படுத்துவதற்குப் பதில், இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் எண்ணத்துடன், முழுக்க முழுக்க வணிக நோக்கத்தோடு விவசாய நிலங்களை திமுக அரசு அபகரிக்க முயல்கிறது. இதைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரும் நவ.19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பதுவஞ்சேரி-மப்பேடு சந்திப்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.
இதில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT