Published : 14 Nov 2024 12:23 AM
Last Updated : 14 Nov 2024 12:23 AM

எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர், தலைவர்கள் இரங்கல்

திருநெல்வேலி: தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புஷ்பராஜ் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ் கௌதமன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள புதுப்பட்டியில் பிறந்தவர். அங்கு தொடக்கக் கல்வியும், மதுரையில் மேல்நிலைக் கல்வியும் முடித்த அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அண்ணாமலை பல்கலை.யில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் சில ஆண்டுகளாக வசித்து வந்த அவர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மு.அப்துல்வகாப், நெல்லை துணை மேயர் கே.ராஜு, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் அஞ்சலி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பண்பாட்டு ஆய்வுகளுக்காக அறியப்பட்ட ராஜ் கௌதமன், தலித்தியம், பின்நவீனத்துவம், பழந்தமிழ் இலக்கியம் போன்ற பல்வேறு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். நாவல்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ள அவருக்கு, விளக்கு விருது (2016), விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2018), வானம் இலக்கிய விருது (2022) உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன. தமுஎச சார்பில் நேற்று முன்தினம் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனை விருது ராஜ் கௌதமனுக்கு நேரில் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "பேராசிரியர் ராஜ் கௌதமன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனையாளரான ராஜ் கௌதமன் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் இணையர் பேராசிரியர் க. பரிமளம், தங்கை எழுத்தாளர் பாமா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர்கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x