Published : 14 Nov 2024 12:06 AM
Last Updated : 14 Nov 2024 12:06 AM
நாமக்கல்: தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, விவசாய நிலங்களில் உள்ள பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி, விற்பனை செய்யலாம். கள் போதைப் பொருள் அல்ல, உணவுப் பொருட்கள் பட்டியலில் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கள்ளுக் கடைகளை ஏலம் விட்டு, கள் விற்பனை செய்தால்தான் கலப்படம் நடக்கும். விவசாயத் தோட்டங்களில் கள் இறக்கி நேரடியாக விற்பனை செய்தால், கலப்படம் செய்ய முடியாது. எனவே, வரும் ஜன. 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கி, விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
சுற்றுச்சூழலை பாதிக்கும்... ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையால் காற்று, தண்ணீர், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, சுற்றுவட்டார கிராம மக்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க, நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைக்க உத்தேசித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். சுற்றுச் சூழல், வேளாண்மை மற்றும் மக்களுக்கு பாதிப்பு தரும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு கள் இயக்க மாநில அமைப்பாளர் கதிரேசன், விவசாயிகள் முன்னேற்றக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT