Last Updated : 13 Nov, 2024 07:59 PM

21  

Published : 13 Nov 2024 07:59 PM
Last Updated : 13 Nov 2024 07:59 PM

பழைய ஓய்வூதிய திட்டம் மீதான தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன? - தலைமைச் செயலக சங்கம் கேள்வி

பிரதிநிதித்துவப்படம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை மீதான அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலக சங்கம் வலியறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சங்க தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் லெனின் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தலைமைச்செயலகத்தில் கடந்த நவ.8-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் தேர்தலுக்குள் நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தியதாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் செய்தி வெளியானது. இது, தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல் நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் கரோனா பேரிடர், முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி, மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீட்டை சமாளித்து நிதி மேலாண்மை மேற்கொள்வதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த பின்புலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அமல்படுத்தப்பட்ட சரண் விடுப்பு உரிமை, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது. இது இனிமேல் ஒரு போதும் வழங்க இயலாது என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.

சரண் விடுப்புதான் இல்லை என்றால், காலிப்பணியிடங்கள் நிரப்புவதிலும் மெத்தனப்போக்கு நிலவுகிறது. 4 லட்சத்துக்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஆளும் அரசே பணியாளர்களை தனியார் முகமை மூலம் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும் போக்கு உள்ளது. இது, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் முற்றிலும் எதிரான போக்காகும்.

கடந்த நவ.8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதாக வந்த செய்தியை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர், பாமக தலைவர் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள், தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாமல் வஞ்சிப்பதாக அறிக்கை வெளியிட்டனர். இதற்கு தமிழக அரசு மற்றும் நிதியமைச்சர் சார்பில் பதில் அறிக்கைகள் வந்துள்ளன.

ஆனால், அறிக்கைகள் திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து எள்ளளவும் குறிப்பிடாமல் மிகவும் சிரத்தையுடன் தயாரிக்கப்படுகிறது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்காமல், அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வெளியாகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் போது, இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, முதல்வர் இந்த காரணங்களை சீர்தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சரண் விடுப்பு , காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மீதான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x