Published : 13 Nov 2024 06:38 PM
Last Updated : 13 Nov 2024 06:38 PM
சென்னை: “அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது. தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “தமிழகத்தில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் - ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இதுபோன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT