Published : 13 Nov 2024 06:06 PM
Last Updated : 13 Nov 2024 06:06 PM
சென்னை: “ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டு ஆய்வாளராக விளங்கிய பேராசிரியர் ராஜ் கௌதமன் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் பார்வையில் சமூக வரலாற்று ஆய்வுகள், படைப்பு, தன்வரலாறு, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் விரிவான பங்களிப்புகளை வழங்கிய தமிழின் முன்னணி முற்போக்குச் சிந்தனைமுகமான ராஜ் கௌதமன் மறைவு என்பது தமிழ்ச் சமூகத்துக்கான பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது இணையர் பேராசிரியர் க.பரிமளம், அவரது தங்கை எழுத்தாளர் பாமா உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் அறிவுப்புலத்தைச் சேர்ந்த தோழர்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
அரசு மரியாதை: விசிக தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “பேராசிரியர் ராஜ் கௌதமனின் ஆய்வுகளுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழ்ப் புலமைச் சூழலையும் பற்றியிருக்கும் பாகுபாட்டு உணர்வு அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்குத் தடையாயிருந்தது வேதனைக்குரியதாகும். தமிழக அரசு அவரது நூல்களை அரசுடமையாக்கி அனைவருக்கும் எளிதில் கிடைத்திட வழி செய்ய வேண்டும். அத்துடன் உரிய அரசு மரியாதையோடு அவரை நல்லடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்,” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT