Last Updated : 13 Nov, 2024 04:24 PM

 

Published : 13 Nov 2024 04:24 PM
Last Updated : 13 Nov 2024 04:24 PM

சங்கரதாஸ் சுவாமிகள் 102-வது நினைவு தினம்: அமைச்சர், நாடக கலைஞர்கள் மலரஞ்சலி

படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் கருவடிக்குப்பம் மயானத்தில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 102-வது நினைவு தினம் இன்று நடந்தது. அவரது நினைவிடத்தில் அமைச்சர், நாடக கலைஞர்கள், கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர். ஆனால், வழக்கமாக பங்கேற்கும் திரைத்துறையினர் யாரும் பங்கேற்கவில்லை.

நாடகத் தந்தை என போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது நினைவு தினம் இன்று அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. கருவடிகுப்பம் சுடுகாட்டில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அமைச்சர் திருமுருகன் மலரஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து சிலைக்கும் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள், கண்காணிப்பாளர் அருள்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில் அருகிலிருந்து கலைஞர்களின் ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சங்கரதாஸ் படத்துடன் தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நாட்டுப்புற கலைஞர்கள், கூத்து கலைஞர்கள், நாடக நடிகர்கள் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பல்வேறு வேடங்களை கலைஞர்கள் அணிந்து வந்தனர். ஊர்வலம் கருவடிகுப்பம் நினைவிடத்தை அடைந்தது. அங்கு கலைஞர்கள் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினர், இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடக கலைஞர்கள் அஞ்சலி செலுத்த ஊர்வலமாக வந்தனர்

வழக்கமாக திரைத் துறையினர் பங்கேற்பார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து முக்கிய நடிகர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இம்முறை யாரும் பங்கேற்கவில்லை. கொட்டும் மழையிலும் பல நாடக கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x