Last Updated : 13 Nov, 2024 04:22 PM

 

Published : 13 Nov 2024 04:22 PM
Last Updated : 13 Nov 2024 04:22 PM

“ஸ்டாலின் ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை” - இபிஎஸ் @ கோவை

கோவை விமான நிலையத்தில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார் |  படம்: ஜெ.மனோகரன். 

கோவை: “ஸ்டாலினின் ஆட்சியில் எந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை,” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்துக்கு இன்று (நவ.13) வந்தார். அவரை முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முதல்வர் ஸ்டாலின் என்னைப்பற்றி பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஊடகங்கள் வாயிலாக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்னைப்பற்றி விமர்சனம் செய்வதாக, கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் எழுதி உள்ளார். நான் அவரை கொச்சைப்படுத்தி பேசுவதாகவோ, எதிர்க்கட்சி நிலையிலிருந்து தவறுதலாக பேசுவதாக தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலின் எப்படி பேசினார் என அனைவருக்கும் தெரியும். அப்போது என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினார். ஊர்ந்து சென்றார், பறந்து சென்றார் என்றார்

அதிமுக தவறுதலாக விமர்சனம் செய்வதில்லை. ஆனால் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களை பற்றி தவறுதலாக பேசினால் தக்க பதிலடி கொடுப்போம். கோவையில் ரூ.290 கோடி மதிப்பில் அரசு நூற்றாண்டு மருத்துவமனை, நொய்யல் ஆறு புனரமைப்பு, காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், நான்கு வழிச்சாலை, தொண்டாமுத்தூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட 6 இடங்களில் அரசு கல்லூரிகள், பாலக்காடு, மேட்டுப்பாளையம், அவினாசி, 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டது. உயர்மட்ட மேம்பாலங்கள், ரூ.3650 கோடி மதிப்பில் பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டம் , பவானி கூட்டு குடிநீர் திட்டம் என அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் அரசு திறந்து வைத்துள்ளது.

எனது ஆட்சியில் எந்த திட்டமும் செய்யவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் என்பதாலேயே ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. உப்பிலிபாளையம் - கோல்டுவின்ஸ் வரையிலான மிகப்பெரிய மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் பெற முயல்கின்றனர். கோவை மாவட்ட மக்களுக்கு ஸ்டாலின் எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்? பணிகள் அறிவிக்கப்பட்டு துவங்கப்படவில்லை. பல மாவட்டங்களுக்கு முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார். ஸ்டாலின் ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. அதன்பின் எவ்வாறு ஆய்வு செய்ய முடியும்? நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை திறந்து வைத்து வருகிறார்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் 2 விரிவான திட்டத்தையும், கோவை மெட்ரோ ரயில் திட்டம் , வளர்கின்ற மாவட்டம், போக்குவரத்து நெரிசலை குறைக்க, தொழிற்சாலை அதிகமாக உள்ள மாவட்டம் என்பதால் கோவை மெட்ரோ திட்டம் கொண்டு வந்தது. விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது.கோவை சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம் 99 சதவீதம் பணிகள் நில எடுப்பு பணிகள் முடிந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தது, திமுக மத்திய அரசுக்கு புது கட்டுப்பாடுகள் விதித்தால் கால தாமதம் ஆனது. தற்போது தான் இந்த திட்டம் வரவுள்ளது.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் 50 சதவீதம் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தங்க நகை பூங்கா கொண்டு வர வேண்டும் என திமுக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக அரசு இந்தத் திட்டத்தை அறிவித்தது. நாங்கள் தேர்வு செய்கின்ற இடம் தொண்டாமுத்தூர் தொகுதி என்பதை கிணத்துக்கடவு தொகுதிக்கு மாற்றி உள்ளனர். அவ்வளவு தான். 2021 தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் வழங்கி ஆட்சிக்கு திமுக வந்தது” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x