Published : 13 Nov 2024 04:06 PM
Last Updated : 13 Nov 2024 04:06 PM
சென்னை: “ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத வலிமையான தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்று மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏற்றமிகு தமிழகத்தை உருவாக்க, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் முன்னோடி திட்டமான முதல்வர் காலை உணவு திட்டம், முட்டையுடன் கூடிய சத்துணவு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும், இளம் சிறார்களுக்கு இணை உணவுகள் வழங்கும் திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தமிழக மாணவர்களுக்கும் , மழலைச் செல்வங்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், தமிழக அரசால் ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது.
நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன், முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தைமுதற்கட்டமாக 2022-ம் ஆண்டு செயல்படுத்தினேன். அதன் அடிப்படையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் .பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவேதான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 6 மாதம் வரையிலான குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்குவதுடன், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரணவாசி குழந்தைகள் மையத்தில் நவ.15ம் தேதி நான் தொடங்கி வைக்க உள்ளேன். இத்திட்டத்தினை நான் தொடங்கும் அதேநாளில், மாவட்டங்கள் தோறும் மாவட்ட ஆட்சியர் உடன் இணைந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்படி அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களை தமிழக அரசுடன் இணைந்து, குடும்பத்தினரும் அதிக கவனத்துடன் பராமரிக்க, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் முன் நின்று உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லா வலிமையான வளமான மாநிலமாக தமிழகத்தை நிலை நிறுத்த உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT