Published : 13 Nov 2024 01:22 PM
Last Updated : 13 Nov 2024 01:22 PM

8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி

கோப்புப் படம்

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடம் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரப் பகுதிகளில் 8 இடங்களில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 48 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். அந்த அளவுக்கு நகரப்புறங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதே நேரத்தில் பணி சுமை மற்றும் பணி சூழல் காரணமாக பெரும்பாலானோரால் காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

கட்டுடலை உருவாக்க ஆர்வம் உள்ள ஏழை இளைஞர்களுக்கு, தனியார் உடற்பயிற்சி கூடங்களின் கட்டணங்கள் எட்டாக்கனியாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியுள்ளன. அதில் 6 மகளிருக்கான உடற்பயிற்சி கூடங்களாக இயங்கி வருகின்றன. இவை பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன. பிரத்யேக பயிற்றுநர், நவீன உபகரணங்கள் ஏதும் இல்லை என மகளிர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக பெண்களுக்கான உரிமை மற்றும் முக்கியத்துவம் மேலோங்கி வரும் நிலையில், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதிலும் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர்களில் 103 பேர் மகளிராக உள்ளனர்.

அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதனபடிப்படையில் மாநகராட்சி சார்பில் மேலும் 8 மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: உடல் ஆரோக்கியத்தில் தற்போது மகளிருக்கு அதிக விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் மகளிர் உடற்பயிற்சி கூடங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதன்படி, திரு.வி.க.நகர் மண்டலம், 68-வது வார்டு ஜவகர் நகரில் ரூ.42.20 லட்சத்திலும், கோடம்பாக்கம் மண்டலம், 128-வது வார்டு இளங்கோநகர் சாலையில் ரூ.36.97 லட்சத்திலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 80, 81, 82, 85, 87, 195 ஆகிய வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு உடற்பயிற்சி கூடமும் 46 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. ட்ரெட் மில் உள்ளிட்ட நவீன உபகரணங்களும் இடம்பெற உள்ளன. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x