Published : 13 Nov 2024 01:10 PM
Last Updated : 13 Nov 2024 01:10 PM

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: ஓபிஎஸ் தம்பியை விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

திண்டுக்கல்: பெரியகுளம் அருகே கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (22). இவர் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தார். இவர், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக தனது தற்கொலைக்கு கோயில் அறங்காவலர்களாக இருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா, லோகு, சரவணன், ஞானம், மணிமாறன், சிவக்குமார், பாண்டி ஆகிய ஏழு பேர் தான் காரணம் என கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் புகாரில் பெரியகுளம் தென்கரை போலீஸார் நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு சார்பாக நீதிமன்றத்தில் 390 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தேனி நீதிமன்றத்தில் துவங்கிய நிலையில், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி சுப்புராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்றுவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சரின் (அப்போது) தம்பியாக உள்ளதால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகக்கூடாது. அதற்கு பதிலாக சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இறந்த நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கில் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் வாதாட முடியாது என சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் தெரிவித்ததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் வழக்கை வெளி மாநிலத்திற்கு மாற்றக்கோரியும் சுப்புராஜ் கோரிக்கைவைத்தார்.

இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு பின்னர் திண்டுக்கல் மாவட்ட பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. விசாரணைகள் முழுமையடைந்த நிலையில் நவம்பர் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி முரளிதரன் அறிவித்தார்.

இதனிடையே, இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி முரளிதரன் இன்று அறிவித்தார். அதன்படி, " கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார். இதனிடையே, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதல், ஓ.ராஜா உள்ளிட்ட ஆறு பேர் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் ஆஜராகினர். இதில் பாண்டி என்பவர் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x