Published : 13 Nov 2024 12:25 PM
Last Updated : 13 Nov 2024 12:25 PM
சென்னை: கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும், என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி, விக்னேஷ் என்பவரால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். தமது தாய்க்கு சரியான மருத்துவம் அளிக்கவில்லை என்று கூறி இந்தத் தாக்குதலை விக்னேஷ் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
உலகில் உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் மருத்துவர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அப்பாவி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அரசும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அப்பாவி பொதுமக்களில் தொடங்கி மருத்துவர்கள் வரை யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதைத் தான் இந்த நிகழ்வு காட்டுகிறது. இத்தகைய கொடுமைகள் ஒருபுறம் நடக்கும் நிலையில், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து வருவது குரூரமான நகைச்சுவை ஆகும்.
கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியைத் தாக்கியவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT