Published : 13 Nov 2024 06:15 AM
Last Updated : 13 Nov 2024 06:15 AM

ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா: 24-ல் நடைபெறுவதாக பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, நவ.24-ம் தேதி வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக நிறுவனத் தலைவர், எம்ஜிஆரின் துணைவியாரும், முன்னாள் முதல்வருமான ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழா, அதிமுக சார்பில் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நவ.24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில்,`படத் திறப்பு, மலர் வெளியிடுதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி’ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற உள்ளன.

நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன்,சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜானகி ராமச்சந்திரன் ஆகியோருக்கு புகழ் சேர்க்கும் வகையில், அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கலைத் துறையைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், ஜானகி ராமச்சந்திரன் அவர்களுடைய நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x