Published : 13 Nov 2024 06:04 AM
Last Updated : 13 Nov 2024 06:04 AM

இந்திய கல்விமுறையை சிதைத்து சுயமரியாதையை சீரழித்தவர்கள் ஆங்கிலேயர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இந்திய கல்விமுறையை சிதைத்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். பி.செந்தில்குமார் என்பவர் எழுதிய "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது.

இந்நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது: நான் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகம் வந்தபோது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வீரர்களின் பட்டியலை தமிழக அரசிடம் கேட்டுப்பெற்றேன். அந்த பட்டியலில் வெறும் 30 பேர்களின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்தன. அதை பார்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் நாகலாந்தில் பணியாற்றி இருக்கிறேன். சுதந்திர போராட்டத்தில் நாகலாந்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் வெறும் 30 பேர் மட்டும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருக்க முடியும். எனவே குறைந்தபட்சம் 100 சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலை தயார்செய்து அவர்களின் வரலாற்றை தயார்செய்யுமாறு அறிவுறுத்தினேன்.

அந்த காலகட்டத்தில்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் எனக்கு கிடைத்தது. இந்த புத்தகம் வரலாற்று ஆவணங்கள் மற்றும் குறிப்புகளுடன் கற்பனை கலக்காமல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் பிஎச்டி ஆய்வுத்தரத்தில் அமைந்துள்ளது. இதற்காக நூலாசிரியரைப் பாராட்டுகிறேன்.

நாம் யார்? - நாம் எதற்காக வரலாற்றை படிக்க வேண்டும்? இந்த எந்த புத்தகம் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது? இது நாம் யார் என்பதையும் நம் முன்னோர்கள் பலவீனம் மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததையும், ஆங்கிலேயர்கள் என்ன செய்தனர் என்பதையும் படம்பிடித்து எடுத்துக்காட்டுகிறது.

ஆங்கிலேயர்கள் இந்திய கல்விமுறை மாற்றியதுடன் இந்தியர்களின் சுயமரியாதையை அழித்தனர். இந்தியாவையே பார்த்திராத ஜேம்ஸ் ஸ்டூடவர்ட் மில் என்ற கிறிஸ்தவ மதபோதகர் இந்தியாவின் வரலாற்றை 5 தொகுதிகளை எழுதினார். அந்த புத்தகத்தில் இந்தியர்களை பற்றி தவறாக பதிவுசெய்தார். அந்த புத்தகமே கிழக்கிந்திய கம்பெனியினராலும், ஆங்கில அரசாலும் குறிப்பு நூலாக பயன்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்கள் நமது தொழில்களையும் விவசாயத்தையும் சீரழித்தனர். ஆனால் அந்த ஆங்கிலேயர்களை இன்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழங்களின் வேந்தர் என்ற முறையில் அரசியல், அறிவியல், வரலாறு பாடத்திட்டங்களை கேட்டேன். அந்த பாடத்திட்டத்தில் ஆங்கிலேயர்களின் புகழ்ச்சி தொடர்பாகவே அதிக தகவல்கள் உள்ளனவே தவிர கட்டப்பொம்மன் பற்றியோ, மருது சகோதர்கள் பற்றியோ விவரங்கள் இல்லை.

வெட்கக்கேடான செயல்: 20-ம் நூற்றாண்டு என்று வரும்போது முழுவதும் திராவிட இயக்கம், பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலை போராட்ட இயக்கம் பற்றிய எதுவும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் பங்களிப்புகள் குறித்தோ எதுவும் இல்லை. தற்போது வரை ஆங்கிலேயர்கள் பெரியவர்கள் என்று தான் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அதாவது நாம் அடிமைகள், ஆங்கிலேயர்கள் காலனியாதிக்கத்துக்கு பிறகு நன்மைகள் செய்தனர் என்று சொல்ல வருகிறார்கள். இது வெட்கக்கேடான செயல்.

தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை தந்துள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவ படையில் 4700-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் பணியாற்றி உயிரிழந்துள்ளனர்.

அவர்களை நினைவுகூர்ந்தால் நாம் மதிப்பு பெறுவோம். தமிழகம் ஏராளமான அறிவாளிகளையும் கவிஞர்களையும், தத்துவ சிந்தனையாளர்களையும் உருவாக்கிய பூமி. உண்மையான வரலாறை அறிந்துகொள்ள தற்போதைய வரலாற்றை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். அந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது. இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x