Published : 13 Nov 2024 04:01 AM
Last Updated : 13 Nov 2024 04:01 AM

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா: தமிழக சுற்றுலா துறை அமைக்கிறது

சென்னை: மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழக சுற்றுலா துறை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா என்ற பிரத்யேக பூங்காவை அமைக்க இருக்கிறது.

தமிழக அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் இந்த பூங்காவில் சோலை வனம், விஹாரம், மைதானம் என 3 பிரிவுகள் இடம்பெறும். இங்கு 2 நட்சத்திர விடுதிகள், 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

சோலை வனத்தில் தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புகளை குறிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத் தோட்டம், கலைநிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள் காட்சி, பொம்மை பூங்கா போன்றவற்றின் சிறு உருவங்கள் இடம்பெறும். அதேபோல், விஹாரம் முழுமையாக குழந்தைகள் மற்றும் விளையாட்டு பகுதிக்கானது. ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவற்றுடன் அமைக்கப்படும். மைதானம் சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கும் 25 ஆயிரம் பேர் கூடும் வகையில் 13 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், வாலிபால், டென்னிஸ், கூடைப் பந்து உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு மைதானங்களும் இதில் இடம் பெறும்.

நடைபாதைகள், நீர்வழிகள், சைக்கிள் பாதைகள் உருவாக்கப்பட்டு பார்வையாளர்கள் நீர்முனையை அணுகும் வகையில் இந்த பூங்கா அமைந்திருக்கும். அதோடு நீர் முனை களில் படகு சவாரி, குழந்தைகளுக்கான மண்டலங்கள் போன்ற செயல்பாடுகளும் இடம்பெற உள்ளன. கருப்பொருள் சிற்பங்கள், சிறு கடைகள், திறந்தவெளி திரையரங்குகள், கலாச்சார குடில்கள், உணவு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. இது சென்னைவாசிகளுக்கு கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக திகழும் என சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x