Published : 13 Nov 2024 12:49 AM
Last Updated : 13 Nov 2024 12:49 AM

எத்தனை மொழிகளை கற்றாலும் மாணவர்கள் தாய் மொழியை மறக்க கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று 40-வது ஆண்டு விழாவை தொடங்கிவைத்தார் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. உடன், விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி., விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: மாணவர்கள் எத்தனை மொழிகளைக் கற்றாலும், தாய் மொழியை மறக்கக் கூடாது என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 40-வது ஆண்டு மாணிக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பணியாளர் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் மாணவிகளுக்கான அடுக்குமாடி விடுதிக் கட்டிடத்தை வெங்கய்ய நாயுடு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் நேற்று திறந்துவைத்தனர்.

தொடர்ந்து, அண்ணா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஐடியின் 40-வது ஆண்டு மாணிக்க விழாவை வெங்கய்ய நாயுடு தொடங்கிவைத்தார். தலைமை வகித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘180 மாணவர்களுடன் தொடங்கிய விஐடி வேலூர் வளாகத்தில் தற்போது 44 ஆயிரம் பேர் பயில்கின்றனர்.

இந்தியாவில் கல்வி நிறுவனங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைத்தால்தான், பெற்றோரின் கல்விச் செலவு குறையும். பள்ளிக் கட்டிடங்களுக்கு பல்வேறு தடையில்லாச் சான்றுகள் வாங்க வேண்டியுள்ளது. இதை மாநில அரசு எளிமையாக்க வேண்டும். இந்தியாவில் 80 சதவீதம் செல்வம் வைத்துள்ள 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு 4 சதவீத வரிதான் செலுத்துகின்றனர். அதேபோல, 5 முதல் 6 சதவீதம் செல்வம் வைத்துள்ள 50 சதவீதம் பேர் ஆண்டுக்கு 64 சதவீத வரி செலுத்துகின்றனர். இந்நிலை மாற வேண்டும்’’ என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, "விஐடி புகழுக்கு முழு காரணம் விசுவநாதன்தான். இது தனி மனிதரின் வெற்றி. அவர் எதைச் செய்தாலும் திட்டமிட்டு செய்வார். இந்த ஆற்றல்தான், இவ்வளவு பெரிய நிலைக்கு கொண்டு வந்துள்ளது’’ என்றார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: விஐடி பல்கலை.யின் வளர்ச்சிக்கு விசுவநாதனின் யோசனை, அனுபவம், திட்டமிடல்தான் முக்கியக் காரணம். அவர், இளைய தலைமுறைக்கு கல்வியுடன், தன்னம்பிக்கையும் அளித்து வருகிறார். ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்புக்கு உதாரணமாகத் திகழ்கிறார்.

சேவை கிடைப்பதில் இடைவெளி: உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகரிக்கின்றனர். நாட்டில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளவர்களிடையே, கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களுக்கு இன்னும் அதிக உதவிகள் தேவைப்படுகின்றன. ஆனால், அனைத்தையுமே அரசு மட்டும் வழங்கிவிட முடியாது. அரசுடன், தனியார் துறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். மாணவர்கள் எத்தனை மொழிகளை கற்றாலும், தாய் மொழியை மறக்கக் கூடாது. அதேநேரத்தில், பிறமொழிகளையும் வெறுக்கக்கூடாது.

நானும் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் பங்கேற்றவன்தான். ஆனால், டெல்லிக்கு சென்றபோதுதான் அதன் பாதிப்பு தெரிந்தது. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. ஆனால், மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியாபென்டரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், அறங்காவலர் ரமணி சங்கர், டி.எம்.கதிர் ஆனந்த் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x