Published : 12 Nov 2024 08:54 PM
Last Updated : 12 Nov 2024 08:54 PM
செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் அடுத்த இபி காலனி பகுதியில் மின் கம்பங்களை ஏற்றி சென்ற டிராக்டர், சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் நகரில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்திலிருந்து, எலப்பாக்கம் கிராமத்துக்கு மின்கம்பங்களை கொண்டு செல்வதற்காக டிராக்டர் ஒன்று வரவழைக்கப்பட்டது. இதில், 6 மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் எலப்பாக்கம் நோக்கி சென்றது. அப்போது, அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் காட்டுக்கருணை பகுதியை சேர்ந்த அபிஷேக், திம்மாவரம் பகுதியை சேர்ந்த ரோகித் மற்றும் கிஷோர்குமார் ஆகிய மூவரையும், டிராக்டரில் ஏற்றி சென்றதாக தெரிகிறது.
இதில், இபி காலனி என்ற பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டரில் பயணித்த பள்ளி மாணவர்கள் அபிஷேக்,ரோகித் மற்றும் ஓட்டுநர் அசோக் ஆகிய மூவரும் மின்கம்பங்கள் இடையே சிக்கி படுகாயமடைந்தனர். மற்றொரு மாணவர் லேசான காயமடைந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி மாணவர் அபிஷேக் உயிரிழந்தார். டிராக்டர் ஓட்டுநர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அச்சிறுப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மின் கம்பங்களை ஏற்றிச்சென்ற டிராக்டரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மின்சார வாரிய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT