Last Updated : 26 Jun, 2018 09:48 AM

 

Published : 26 Jun 2018 09:48 AM
Last Updated : 26 Jun 2018 09:48 AM

சென்னையில் தார் சாலைகள் உயர்ந்துகொண்டே போவதால் சாலை நடுவே குழிகளாக மாறும் பாதாள சாக்கடை திறப்புகள்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்; ஒருங்கிணைப்பு இல்லாத அரசுத் துறைகள்

சென்னை மாநகரில் ஒவ்வொரு முறை சாலை அமைக்கும்போதும், அதற்கேற்ப பாதாள சாக்கடை திறப்புகள் உயர்த்தப் படாததால், அவை மாபெரும் குழிகளாக மாறி வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மாநகராட்சிக்கும், குடிநீர் வாரியத்துக்கும் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை மாநகரில் சுமார் 387.35 கி.மீ. நீளத்துக்கு பேருந்து சாலைகளும், 5,623 கி.மீ. நீளத்துக்கு உட்பிரிவு சாலைகளும் உள்ளன. மாநகராட்சிப் பகுதியில் தார்ச் சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகின்றன. சாலை அமைக்கும்போது சாலையின் மட்டம் உயர்ந்துவிடுகிறது. ஆனால், அதற்கேற்ப பாதாள சாக்கடை திறப்புகள் (Manhole) உயர்த்தப்படுவதில்லை. இதுபோல சென்னை முழுவதும் சுமார் 40 ஆயிரம் பாதாள சாக்கடை திறப்புகள் உள்ளன. இதனால், மழையின்போதும், கனரக வாகனங்கள் ஏறி இறங்குவதாலும், சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை திறப்புகள் உடைந்து நொறுங்கி பெரிய குழிகள் ஆகிவிடுகின்றன. சாலை நன்றாக இருந்தாலும், வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்தக் குழிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை திறப்பு குழியில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக வாகன ஓட்டிகள் வளைந்து நெளிந்து செல்கின்றனர். பலர் திடீரென பிரேக் போடுகின்றனர். அதனால் பின்னால் வரும் வாகனங்கள் முட்டி மோதி விபத்து கள் ஏற்படுகின்றன. சிறிய சக்கரம் கொண்ட ஸ்கூட்டர் போன்ற வாகனங்களில் செல்லும் பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சாலை நடுவே செல்வது பாதாள சாக்கடை. ஓரத்தில் செல்வது மழைநீர் கால்வாய். சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை மாநகராட்சி தயாரிக்கும்போதே, சாலை அமைத்தல் மற்றும் பாதாள சாக்கடை திறப்புகளை உயர்த்தி அமைப் பதற்கான செலவும் சேர்த்தே கணக்கிடப் படும். ஆனால், பாதாள சாக்கடை திறப்புகளை உயர்த்தி அமைக்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ளும். அதற்கான செலவுத் தொகையை சென்னை மாநகராட்சி வழங்கிவிடும். ஆனால், இந்த நடைமுறை சரிவர பின்பற்றப்படுவது இல்லை. அதனால்தான் சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை திறப்பு கள் குழிகளாக மாறிவிடுகின்றன.

சாலை அமைத்தல், பாதாள சாக்கடை திறப்புகளை உயர்த்தி அமைத்தல் ஆகிய 2 பணிகளில் எதை முதலில் செய்வது என்பதில் சென்னை மாநகராட்சிக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கும் இன்று நேற்றல்ல; கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைப்பு இல்லை. தற்போது ‘பேவர்’ போன்ற பெரிய அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி சாலை அமைப்பதால், பாதாள சாக்கடை திறப்புகளை தவிர்த்துவிட்டு சாலை அமைப்பது இயலாது. மொத்தமாக சாலை அமைக்கப்படும். பிறகு பாதாள சாக்கடை திறப்புகள் மீது போடப்பட்ட தார் தோண்டி அப்புறப்படுத்தப்பட்டு, திறப்பை உயர்த்தி அமைக்க வேண்டும். ஆனால், சாலை அமைத்து பல மாதங்கள் ஆன பிறகும் பாதாள சாக்கடை திறப்புகளை உயர்த்தி அமைப்பதில்லை. அதனால் அவற்றின் மீது மழைநீர் தேங்குவதாலும், கனரக வாகனப் போக்குவரத்தாலும் அவை பெரும் குழிகளாக மாறிவிடுகின்றன.

வெளிநாடுகளில் சாலை அமைக்கும்போது, ஏற்கெனவே சாலையில் போடப்பட்டிருக்கும் தாரை சுரண்டி எடுத்து, உருக்கி, கூடுதலாக தார் கலவை சேர்த்து புதிதாக, ஆனால் அதே உயரத்தில் சாலை அமைக்கின்றனர். அத்தகைய நவீன இயந்திரத்தை வாங்கிய சென்னை மாநகராட்சி, நகரின் சில தெருக்களில் மட்டும் அதைப் பயன் படுத்துகிறது. மெரினா கடற்கரை சாலை, முதல்வர் போய்வரும் சாலைகள், ராதா கிருஷ்ணன் சாலை ஆகியவை வெளிநாடுகளுக்கு இணையாக அமைக்கப்படுகின்றன. இதனால், அந்த சாலைகளின் உயரம் ஒரு அங்குலம்கூட உயர்வதில்லை. ஆனால், இது பெரிய இயந்திரம் என்பதால், குறுகலான சாலைகளில் பயன் படுத்த முடியாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் சுந்தரமூர்த்தி கூறும்போது, “தார்ச் சாலையை உயர்த்தி அமைக்கும்போது, பாதாள சாக்கடை திறப்பை சுற்றி 6-க்கு 6 அடி விட்டத்தில், வட்டவடிவில் 4 அல்லது 6 அங்குல உயரத்துக்கு வலுவான இரும்பு வளையம் (ஸ்டீல் ரிங்) அமைத்து சாலை அமைக்க வேண்டும். அதன் பிறகு, பாதாள சாக்கடை திறப்புகளை உடனே உயர்த்தி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பாதாள சாக்கடை திறப்புகள் பள்ளமாக மாறுவதைத் தவிர்க்கலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x