Published : 12 Nov 2024 08:29 AM
Last Updated : 12 Nov 2024 08:29 AM
சென்னை: சென்னையில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி இன்று (நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்றிரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல், அடுத்த 24 மணி நேரத்துக்கு சென்னையில் விட்டுவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டும் குறுகிய நேரத்தில் 20 செ.மீ வரை மழை பதிவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. முன்னதாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு உருவாகாமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று (நவ.11) மதியம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ.12) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (நவ.13) மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் இயக்கம் தாமதம்: சென்னையில் மழை பெய்து வருவதால் மும்பை, டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT