Published : 12 Nov 2024 06:15 AM
Last Updated : 12 Nov 2024 06:15 AM

திருவொற்றியூர் தனியார் பள்ளி வாயுக்கசிவு விவகாரம்: மாணவர் மயக்கத்துக்கு முயல்களே காரணம்

சென்னை: சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இயங்கும் விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி வாயுக்கசிவு காரணமாக 39 மாணவிகள் மயங்கியதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. விடுப்பு முடிந்து தனியார் பள்ளி கடந்த நவ.4-ம் தேதி திறக்கப்பட்டது. அப்போதும் சில வகுப்பறைகளில் மாணவர்களுக்கு மீண்டும் வாயு நெடி உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 பேர் வரை மயங்கியதால் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 4 நாட்கள் காற்றுத்தர பரிசோதனை ஆய்வு நடத்தினர். அதில் வாயுக் கசிவுக்கான சாத்தியக்கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதன் ஆய்வறிக்கையையும் அதிகாரிகள் அரசுக்கு சமர்ப்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘தனியார் பள்ளியில் விஷ வாயுக் கசிவுக்கான அறிகுறி எதுவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், பள்ளியில் 35 முயல்கள் வளர்க்கப்படுகின்றன. அந்த முயல்களின் எச்சங்களில் இருந்து மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

எனவே, வளாகத்தில் உள்ள முயல்களை முழுமையாக அகற்ற வேண்டுமென நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளியை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்து இன்று (நவ.12) பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது’’ என்றார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் காவல் துறையினர் மூலமாக விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x