Last Updated : 09 Jun, 2018 05:56 PM

 

Published : 09 Jun 2018 05:56 PM
Last Updated : 09 Jun 2018 05:56 PM

ஜப்பான் நிதியுதவியுடன் தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம்: கடலூரில் நடைமுறைக்கு வருகிறது

கடலூர் மாவட்டத்தில் கடலூர்-சேலம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது பணிகள் முடிந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரத்தில் இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டன. அதேபோன்று விருத்தாசலம்-சிதம்பரம் சாலை விரிவாக்கமும் நடைபெறுவதால் அந்த சாலைகளிலும் மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.

தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளும் தற்போது தொடங்கிய நிலையில், சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகால மரங்கள் அடியோடு வெட்டப்படுகிறது.இது பல இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக சாலையின் ஓரத்திலுள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருவது குறித்து கடலூர் மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக 14,180 மரங்கள் வனத்துறை மூலமாக நடப்பட உள்ளது. தற்போது விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் பணி முடிந்த பகுதிகளில் 4,570 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலை மார்க்கத்திலும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட பாலங்கள் பகுதியிலும் மரக்கன்று நடத் திட்டமிட்டுள்ளோம்.

இதுதவிர ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம். அதன்படி வேகாக்கொல்லை, சேடப்பாளையம், மணக்குப்பம் ஆகிய தோட்டக் கலைப் பண்ணைகளில் 2 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மழைக்காலமான ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும். அப்போது மரம் வளர்க்க விருப்புமுள்ள தனியாருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பவர்களை கண்காணித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து,சரியான முறையில் வளர்ப்பவருக்கு அதற்கேற்ப ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அந்தந்தப்பகுதி வனச்சரகங்களை அணுகலாம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x