Published : 12 Nov 2024 07:08 AM
Last Updated : 12 Nov 2024 07:08 AM
தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்.21-ம் தேதி 4-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மதியழகன் கூறியது: அக்.21-ம் தேதியன்று அந்த வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், ஒரு மாணவரை வகுப்பறையை கவனித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர். அந்த மாணவர்தான், வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியுள்ளார். ஆசிரியர்கள் யாரும் ஒட்டவில்லை. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தர வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியை புனிதாவிடம் கேட்டபோது, ‘‘வகுப்பில் யாரும் பேசக் கூடாது என்பதற்காக வாயில் ‘செல்லோ டேப்’ ஒட்டியுள்ளனர். பின்னர், அந்த வகுப்புக்கு நான் சென்ற போது, ஒரு மாணவரின் வாயில் மட்டும் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்தது. நான் அதை உடனடியாக அகற்றச் சொல்லிவிட்டேன். மாணவர்கள் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டிருந்ததை புகைப்படம் எடுத்தது யார் எனத் தெரியவில்லை. என்னிடமும், மாணவர்களிட மும் வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் எனது விளக்கத்தை தெரிவித்துள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT