Published : 12 Nov 2024 05:51 AM
Last Updated : 12 Nov 2024 05:51 AM
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.40,968.68 கோடியில் 10,14,959 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்ய 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரின்டர்கள் மற்றும்தடையில்லா மின்சாரம் வழங்கும்சாதனம் (UPS) ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட சேவைகளை எளிதாக பெற, மின் ஆளுமைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊரகப் பகுதி சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.10,584 கோடியில்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளிலும் ரூ.34,609.44 கோடியில் 10,11,334 குடும்பங்கள் 100 நாட்கள் வேலை செய்து பயன்பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் ரூ.10,584 கோடியில் 19,450 கி.மீ சாலைகள் மற்றும் 425 பாலங்கள் அமைக்கப்படுகின்றன.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தில், கடந்த 2021 முதல் தற்போது வரை 3,30,757 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கி அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் இதுவரை கிராமப் புறங்களின் 7151339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மகத்தான திட்டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றி கண்டு வருகிறது திமுக அரசு. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT