Published : 11 Nov 2024 08:04 PM
Last Updated : 11 Nov 2024 08:04 PM
தூத்துக்குடி: “இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது.
இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.
தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.
அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும்” என்று சீமான் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்: தொடர்ந்து தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் கட்சி பொறுப்பாளர்களுடன் சீமான் கலந்துரையாடினார். தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி மாப்பிள்ளையூரணி பகுதியில் 50 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். மாலையில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், தலைவர் ஜெயசீலன், பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT