Published : 11 Nov 2024 08:01 PM
Last Updated : 11 Nov 2024 08:01 PM

புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய கல்வி நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம்

சென்னை: புதுச்சேரியில் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்திய புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு (பிம்ஸ்) ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (பிம்ஸ்) கடந்த 2017- 18 ம் கல்வியாண்டில், தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக 26 மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்த்துள்ளதாகக்கூறி அவர்களை பாதியில் விடுவித்து இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “தற்போது அந்த 26 மாணவர்களும் தங்களது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவர்களாக சேவையாற்றி வருகின்றனர். அதில் பாதி பேர் மருத்துவ மேற்படிப்பை படித்து வருகின்றனர். தற்போது அவர்களின் மருத்துவ சேர்க்கை செல்லாது என அறிவித்தால் அவர்கள் கற்ற மருத்துவக்கல்வி வீணாகி விடுவதுடன், சமூகத்துக்கும் பயனற்றதாகி விடும்” என வாதிட்டார்.

இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிரபு மனோகர், சுபரஞ்சனி ஆனந்த் ஆகியோர் மருத்துவ படிப்பை முடித்துள்ள அந்த 26 மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மருத்துவ கல்வி ஒழுங்குமுறை விதிகளின்படி அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு 26 மருத்துவ இடங்களை நிரப்பக்கூடாது என அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும். அத்துடன் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடத்திய அந்த நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்க வேண்டும், என வாதிட்டனர்.

அதற்கு புதுச்சேரி கல்வி நிறுவனம் தரப்பில், அடுத்து வரும் இரு கல்வி ஆண்டுகளுக்கு தலா 13 மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்றுக் கொண்ட நீதிபதி எம். தண்டபாணி, “மருத்துவ படிப்பை நிறைவு செய்துள்ள 26 மருத்துவ மாணவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர்களுக்கான படிப்பு நிறைவுச் சான்றிதழை மருத்துவ ஆணையம் வழங்க வேண்டும்.

வரும் 2025-26 மற்றும் 2026-27 ஆகிய கல்வி ஆண்டுகளில் தலா 13 மருத்துவ இடங்களை மனுதாரர் நிறுவனம் அரசு ஒதுக்கீட்டுக்கு ஒப்படைக்க வேண்டும். மேலும் விதிகளை மீறி மருத்துவ சேர்க்கை நடத்தியதற்காக புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதில், ரூ.10 லட்சத்தை தரமணியில் உள்ள ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டிக்கும், ரூ.10 லட்சத்தை அடையார் புற்றுநோய் மருத்துவ வளாகத்தில் உள்ள மகேஷ் நினைவு அறக்கட்டளைக்கும் இரு வாரங்களில் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x