Published : 11 Nov 2024 05:20 PM
Last Updated : 11 Nov 2024 05:20 PM
மதுரை: மதுரை மழை வெள்ளத்துக்கு தீர்வு காணும் வகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த மதுரை செல்லூர் கண்மாய் உபரிநீர் வெளியேறும் கால்வாயில் ரூ.15 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
மதுரை செல்லூர் கண்மாய், மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கிய நீர் ஆதாரமாமனது. மிகவும் பழமையான இக்கண்மாய் வைகை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதி 29.225 சதுர கி.மீ. உள்ளது. இக்கண்மாயின் பாசனப்பரப்பு 72.73 ஹெக்டெர் நிலங்கள் முழுமையாக மாநகர் குடியிருப்புகளாக மாறிவிட்டன. ஆனால், கண்மாய் மழைநீர், தேக்கப்பட்டு அது நிரம்பும் பட்சத்தில் வைகை ஆறுக்கு செல்கிறது. கண்மாயின் மொத்த கொள்ளளவு 16.490 மி.க.அடி. ஆகும். இக்கண்மாயின் உபரிநீர் 2600 மீட்டர் நீளம் கொண்ட பந்தல்குடி கால்வாய் மூலம் வைகை ஆற்றினை சென்றடைகிறது.
இக்கண்மாயின் மேல் பகுதியில் விளாங்குடி கண்மாய், கரிசல் குளம் கண்மாய், சிலையநேரி கண்மாய், ஆனையூர் கண்மாய், முடக்கத்தான் கண்மாய் மற்றும் தத்தனேரி கண்மாய் போன்றவை உள்ளன. இந்த கண்மாய்களின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் தற்போது குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதால் இந்த கண்மாய்களின் உபரிநீரும் கூடுதலாக செல்லூர் கண்மாய்க்கு வந்து சேருகிறது. அதனால், மழை காலங்களில் செல்லூர் கண்மாய்க்கு அதிகப்படியான தண்ணீர் வந்துள்ளது.
ஆனால், செல்லூர் கண்மாயின் உபரி நீராக வடிவமைக்கப்பட்ட அளவான 2,513 கன அடியை விட கூடுதலாக 3,603 கன அடி வெளியேற்றப் பட்டுள்ளது. அதனால், சமீபத்தல் பெய்த குடியிருப்புப் பகுதிகளான செல்லூர், கட்டபொம்மன் நகர், பி.பி.குளம் மற்றும் நரிமேடு ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை நீர் தேக்கத்தால் மிகுந்த சிரமப்பட்டனர்.
இந்நிலையில், மதுரை வெள்ளத்தை கேள்விப்பட்டு, கடந்த 30-ம் தேதி ஆய்வு செய்து செல்லூர் கண்மாயின் மூடிய கால்வாய் திட்டத்துக்கு ரூ.11 கோடியே 90 லட்சத்தில் செல்லூர் கண்மாய் உபரிநீர் வெளியேறும் கால்வாயை அகலப்படுத்தி புதிதாக காங்கிரீட் கால்வாயாக கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சியின் குடிநீர் பைப் மற்றும் கழிவுநீர் பைப்புகளை இடமாற்றம் செய்வதற்கு ரூ.3 கோடியெ 15 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதால் தற்போது காங்கிரீட் கால்வாய் அமைக்கும் திட்டம், ரூ.15 கோடியே 10 லட்சத்திற்கு மறு மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செல்லூர் கண்மாயில் உபரிநீர் வெளியறும் காங்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக புதிய ரெகுலேட்டர், தொட்டி மற்றும் 290 மீட்டர் நீளத்திற்கு சுரங்க கால்வாய் கட்டும் பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், எம்எல்ஏ-க்கள், வெங்கடேசன் (சோழவந்தான்), பூமிநாதன் (மதுரை தெற்கு), மாநரகாட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT