Published : 11 Nov 2024 03:34 PM
Last Updated : 11 Nov 2024 03:34 PM
சென்னை: பெரம்பலூர் , வாணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.23.75 கோடி வீதம் மொத்தம் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் அமைக்க, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அவசரகால மற்றும் நோய் கண்டறியும் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார உட்கட்டமைப்புகளை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டு முதல், தமிழக அரசு 28 தீவிர சிகிச்சை பிரிவுகளும் (CCBs), 20 மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் (DIPHLs) நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டங்கள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன.
பெரம்பலூர் , வாணியம்பாடி மற்றும் அணைக்கட்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.23.75 கோடி வீதம் மொத்தம் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளும் மேலும், உளுந்தூர்பேட்டை , கம்பம் , பெரம்பலூர், வேதாரண்யம் மற்றும் காரைக்குடி ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா ரூபாய் 1.25 கோடி என, மொத்தம் ரூபாய் 6.25 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் அமைக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்தத் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அவசரகால மற்றும் தீவிர சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய அவசரகால பிரிவு, தீவிர சிகிச்சைப் பராமரிப்புப் பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு கவனிப்பு பிரிவு, நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் அதிக திறன் கொண்ட ஆக்ஸிஜன் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் உள்ளடங்கும். ஒவ்வொரு தீவிர சிகிச்சைப் பிரிவும், குறைந்தபட்சம் 50 படுக்கைகளுடன் அவசர சிகிச்சை சேவைகளுக்காக பிரத்தியேகமாக நிறுவப்பட்டு, தீவிர சிகிச்சை படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஏபிஜி பகுப்பாய்விகள், ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்கள், மயக்க மருந்து பணிநிலையங்கள், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் நோயாளிகளுக்கு விரிவான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக அதிநவீன உபகரணங்களைக் கொண்டிருக்கும்.
இப்பிரிவுகள், அந்தந்த மருத்துவமனைகளிலேயே அவசர சிகிச்சைகளை அளிக்க ஏதுவாக அமைவதால், நோயாளிகளை உயர் மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்வதைக் குறைத்து, உயிர்களைக் காப்பாற்ற உதவுகின்றன. இதன் மூலம், இப்பிரிவுகள் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதங்களை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மேம்பாடுகளால் வாணியம்பாடி, பெரம்பலூர் மற்றும் அணைக்கட்டு அரசு மருத்துவமனைகள் பயனடையும். தற்போது, வாணியம்பாடி மருத்துவமனையில் தினமும் சுமார் 2,511 வெளிநோயாளிகளும், மாதந்தோறும் 5,310 உள்நோயாளிகளும், பெரம்பலூர் மருத்துவமனையில் தினமும் சுமார் 1,632 வெளிநோயாளிகளும், மாதந்தோறும் 14,250 உள்நோயாளிகளும் மருத்துவ சேவைகளை பெறுகின்றனர்.
அணைக்கட்டு மருத்துவமனை நாளொன்றுக்கு 1,057 புறநோயாளிகளுக்கும், மாதந்தோறும் 37 உள்நோயாளிகளுக்கும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்த புதிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளால், இந்த அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருத்துவச் சேவைகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வமைப்புகள், வளர்ந்து வரும் சிறப்பு பராமரிப்பு சேவைகளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்ய உதவும்.மேலும், புதியதாக நிறுவப்படும் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள், அந்தந்த மாவட்டங்களிலேயே உள்ள மருத்துவமனைகளின் நோய் கண்டறியும் திறனை மேம்படுத்துவதுடன், தொற்று நோய்களை நிர்வகிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த உதவுகின்றன.
இவ்வாய்வகங்கள் முழுமையான தானியங்கி பகுப்பாய்விகள், செல் கவுண்டர்கள், ELISA இயந்திரங்கள் மற்றும் BSL-II பெட்டிகள் போன்ற அதிநவீன உபகரணங்களை கொண்டு, நோய் கண்டறியும் திறனை மேம்படுத்தி நோயறிதலில் முதன்மை ஆய்வகங்களாக செயல்பட்டு, துல்லியமான நோயறிதல் மற்றும் வலுவான நோய் கண்காணிப்பை செயல்படுத்த உதவும். மேலும், மாவட்டம் முழுவதிலிருந்தும் பெறப்படும் மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பொது சுகாதார சவால்களை விரைவாக அடையாளம் கண்டு நிர்வகிக்கவும், சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்தவும் உதவும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT