Published : 11 Nov 2024 12:12 PM
Last Updated : 11 Nov 2024 12:12 PM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த தளவாயான் சேதுபதி மன்னரின் புதிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி வட்டம் குளத்தூர் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியர்கள் சி.பால்துரை, சி.ராமமூர்த்தி ஆகியோர் தங்கள் பள்ளி மாணவர் பர்ஜித் வீட்டின் பின்புறம் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கல்லில் பழமையான கல்வெட்டு இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தனர்.
இது பற்றி வே.ராஜகுரு கூறுகையில், “சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் பர்ஜித்தின் தந்தை சகிக்குமார், தனது வீட்டின் அருகிலுள்ள கண்மாயிலிருந்து சில கற்களை எடுத்து வந்துள்ளார். அதனுடன் கல்வெட்டு உள்ள இக்கல்லும் வந்துள்ளது. துணி துவைக்கப் பயன்படுத்தியதால் வீட்டிற்கு வெளியில் கிடந்துள்ளது.
கல்வெட்டில் “சகாத்தம் 1560-ன் மேல்ச் செல்லா நின்ற வெகுதானிய வருஷம் ஆவணி 5-ல் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமிள மடை உடைய நாயன் தழவாயான் சேதுபதி காத்த தேவர் புண்ணியம்” என 12 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1638. இது இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும், அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பையும் குமிழி மடை என்பர். கல்பெட்டியின் மேற்பகுதியிலும், தரைமட்டத்திலும், இருக்கும் நீரோடி, சேறோடி துளைகள் மூலம் கண்மாயின் அதிகப்படியான நீரும், சேறும் வெளியேற்றப்பட்டு, பாசனக்கால்வாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத்துக்கு நீர் திறக்கும்போது துளையை மூடியிருக்கும் கல்லை நீக்குவர். குளத்தூர் கண்மாயில் இத்தகைய குமிழி மடையை மன்னர் அமைத்துத் தந்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.
குளத்தூர் அருகிலுள்ள முதலூரில் இம்மன்னர் கி.பி.1637-ல் குளமும், கலிங்கு மடையும் அமைத்துக் கொடுத்த கல்வெட்டு உள்ளது. தளவாயான் சேதுபதி மன்னர் காலத்தைச் சேர்ந்ததாக இரு கல்வெட்டுகள், 3 செப்பேடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய கல்வெட்டு இம்மன்னரது வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது. இவர் நீர்ப்பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது. இந்த கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT