Published : 11 Nov 2024 06:03 AM
Last Updated : 11 Nov 2024 06:03 AM
சென்னை: கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக 45 கோடி யூனிட் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்துள்ள 400 கோடி யூனிட் என்ற இலக்கை எட்ட முடியும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இடங்களில் மின்வாரியத்துக்கு 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் அருகில் உள்ள அணைகளில் மழைக் காலத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு 75 காசுக்கு கீழ் உள்ளதால், காலை, மாலை ‘பீக் ஹவர்’ மின்தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. போதிய மழை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் நீர்மின் நிலையங்களில் தினமும் சராசரியாக ஒரு கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய மின்சார ஆணையம் 2023-24-ம் ஆண்டில் தமிழக நீர்மின் நிலையங்களில் 422 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அந்தாண்டில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால், இலக்கைவிட குறைவாக 370 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்ததால், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகம் இருந்தது. இதனால், நீர்மின் நிலையங்களில் அதிகளவு மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் கடந்த மாதம் 20-ம் தேதி வரை நீர்மின் நிலையங்களில் 260 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் மின்னுற்பத்தி 215 கோடி யூனிட்டுகளாக இருந்தன. கடந்தாண்டை விட இந்தாண்டு கூடுதலாக 45 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால், மத்திய மின்சார ஆணையம் நிர்ணயித்துள்ள 400 கோடி யூனிட் என்ற இலக்கை எட்ட முடியும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT