Published : 11 Nov 2024 07:11 AM
Last Updated : 11 Nov 2024 07:11 AM

கழிவு நீர் கலப்பதாக அவமதிப்பு வழக்கு தாக்கல்: தாமிரபரணி ஆற்றில் நீதிபதிகள் ஆய்வு

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மீனாட்சிபுரத்தில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைப் பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள்ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர்.படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி: கழிவு நீர் கலக்கும் விவகாரம் தொடர்பாக நெல்லையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தாமிரபரணியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், நீதிமன்ற உத்தரவை மீறி, தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்தனர்.

இதன்படி, நெல்லைக்கு நேற்றுவந்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர், சுற்றுலா மாளிகையில் ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மற்றும் பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோருடன், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கழிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டனர்.

தொடர்ந்து, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, சத்திரம் புதுக்குளம், குறுக்குத்துறை முருகன் கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆய்வு நடத்தும் நிலையில், தற்காலிகமாக அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினர்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “யாரை ஏமாற்றுவதற்கு இதுபோன்று செயல்படுகிறீர்கள்? முறையாக என்ன திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பி, மாநகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து, ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் வரும் பகுதிகளில் துர்நாற்றம் வீசுவது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

ஆய்வை முடித்து நீதிபதிகள் புறப்படும்போது, ராமையன்பட்டி ஊராட்சி வேளாங்கண்ணி நகர் பகுதி மக்கள் நீதிபதிகளின் வாகனத்தை வழிமறித்து, தங்களது பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தால் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி மனு அளித்தனர்.

இதையடுத்து “தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முழுமையாக நிறைவேற்றத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தால் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், தாமிரபரணியைப் பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்” எனவும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x