Published : 11 Nov 2024 05:43 AM
Last Updated : 11 Nov 2024 05:43 AM

திரைப்பட இயக்குநர் பீம்சிங் நூற்றாண்டு விழா: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரைக்கலைஞர்கள் புகழாரம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில், திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பீம்சிங்கின் உருவப் படத்துக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நடிகர்கள் சிவக்குமார், விக்ரம்பிரபு, பீம்சிங் மகன்கள் பி.லெனின், பி.திலீப்குமார், பி.சுரேஷ், கோபி பீம்சிங், பி.இருதயநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் நூற்றாண்டு விழாவில் திரைக்கலைஞர்கள் பங்கேற்று அவருக்கு புகழாரம் சூட்டினர்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறுவெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின்நூற்றாண்டு விழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர் சிவக்குமார் தலைமை தாங்கி முன்னிலை வகித்தனர்.

நடிகர் விக்ரம்பிரபு, இயக்குநர் பீம்சிங்கின் உருவப் படத்தைதிறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேவதாஸ், வி.சி.குகநாதன், அபிராமி ராமநாதன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், காரைக்குடி நாராயணன், சித்ரா லட்சுமணன், டப்பிங்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ராதாரவி, எடிட்டர் லெனின் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.

விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “களத்தூர் கண்ணம்மா படத்தில் நான் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு பிடித்த இயக்குநர்களில் பீம்சிங்கும் ஒருவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசனை சரியாக பயன்படுத்தியவர். பல நூற்றாண்டு விழாக்களை கொண்டாடிய அவரது படங்களில் இருந்து அவர் கையாண்ட எடிட்டிங் முறைகளை புதிய இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவில் சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நஷ்டம் வராது” என்று தெரிவித்தார்.

இயக்குநர் பாக்யராஜ் கூறுகையில், “நான் பீம்சிங்கை பார்த்ததேஇல்லை. ஆனால் சினிமாக்கள் மூலமாக என் மனதில் அவர் ஆழமாகபதிந்துள்ளார். சினிமாவை ரசித்து நேசித்தவர். சினிமாவில் சிறந்தமனிதன் என்பது மிகவும் முக்கியம்.அந்த வகையில் பெருந்தன்மையான குணம் கொண்டவர் பீம்சிங்” என்றார்.

நடிகர் சிவக்குமார் பேசுகையில், “பீம்சிங் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு சாட்சி அவரதுகுடும்பம். நான் எதிர்பார்க்கவில்லை பீம்சிங்குக்கு இவ்வளவு சீடர்கள் இருப்பார்கள் என்று. பாசமலர் படம் பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடன் பாதபூஜை படத்தில் பயணித்தேன். பொறுமையான மனிதர்.இவரைப்போன்ற சிரஞ்சீவியான ஆட்கள் நாம் போனாலும் இன்னும்வாழ்ந்து கொண்டே தான் இருப்பார்கள்” என்று பேசினார்.

இந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமார், பொதுச்செயலாளர் ம.பேரரசு, சினிமா பேக்டரி நிறுவனர் ராஜேஷ் மற்றும் பீம்சிங்கின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x