Published : 10 Nov 2024 07:05 PM
Last Updated : 10 Nov 2024 07:05 PM

‘இந்து தமிழ் திசை’ திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் காலமானார்

ச.கல்யாண சுந்தரம்

திருச்சி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் திருச்சி பதிப்பு தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50.

மயிலாடுதுறையை பூர்விகமாகக் கொண்ட சதாசிவம் - ஜெயலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் கல்யாணசுந்தரம். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 2000-ம் ஆண்டில் தினமணி மதுரை பதிப்பில் மயிலாடுதுறை வட்டார நிருபராக பணியில் சேர்ந்தார். சிறப்பாக செய்தி அளிக்கும் விதத்தைக் கண்ட அப்போதைய தினமணி ஆசிரியர் ராம. திரு சம்பந்தம், இவரை திருவாரூர் மாவட்ட நிருபராக பணி நியமனம் செய்தார்.

ஒரு சில ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்ட நிருபராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் திருச்சி பதிப்பு தலைமை நிருபராக பதவி உயர்வு பெற்றார். அங்கு சுமார் ஐந்து ஆண்டுகள் தலைமை நிருபராக பணிபுரிந்த கல்யாணசுந்தரம் பாரம்பரியமிக்க இந்து குழுமம் 2013-ம் ஆண்டு தமிழில் நாளிதழ் தொடங்கியபோது அதில் இணைந்து திருச்சி பதிப்பு தலைமை செய்தியாளராக உயிரிழக்கும் வரை பணியில் இருந்தார்.

பத்திரிகை பணியை உயிர் மூச்சாகக் கொண்டவர் கல்யாணசுந்தரம். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாட்டை கட்டிக்கொண்டு அலுவலகம் வந்துவிடும் பழக்கம் உடைய கல்யாணசுந்தரம், மறுநாள் வெளியாகும் நாளிதழ் செய்திகளை சரி பார்த்துக் கொடுத்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்.

விவசாயிகள், விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகள் குறித்தும், காவிரி டெல்டா பகுதியின் வேளாண் பிரச்சினை, காவிரி நீர் பாசனம் பிரச்சனை குறித்தும் இவர் ஏராளமான செய்திக் கட்டுரைகள் எழுதி, அந்தப் பிரச்சினைகளின் தீவிரத்தை அரசுக்கு உணர்த்திடக் காரணமாக இருந்தார்.

நேர்மையும் அறமும் தவறாமல் பத்திரிகை உலகில் கால் நூற்றாண்டு காலம் கோலோச்சிய கல்யாண சுந்தரத்துக்கு ஜீவா எனும் மனைவியும், இறையருள், செண்பகா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மயிலாடுதுறையில் தருமபுரம் சாலை, அண்ணாநகர் முல்லை தெருவில் உள்ள அவரது தந்தையார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில் மயிலாடுதுறையில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

மூத்த செய்தியாளர் கல்யாணசுந்தரம் மறைவுக்கு தமிழ செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜாவாஹிருல்லாஹ், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தனது இரங்கல் செய்தியில், ‘தமிழக முதல்வரின் அறிவுரைப்படி கல்யாணசுந்தரம் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் நலவாரியத்தின் மூலம் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் அவரது உடலுக்கு செய்தித்துறை கூடுதல் இயக்குநர் பாண்டியன் (ஓய்வு), விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், இளங்கீறன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x